Archive for January, 2008

Friday, January 25th, 2008

மழை..!

மழை..!
உலர்ந்த பூமியை
முத்தமிட்டு நனைக்கவந்த
ஒற்றைத்துளி நீயோ!
மேகக்காதலன்
பூமிக்காதலியைப் பார்த்து
வடித்த வா(ய்)நீரோ!
ஏழைவயல் நனைத்து
போகும் உயிர் காக்க வந்த
இறைகமண்டல நீரோ!
விளைநிலமல்லாது
களைநிலம்கூட வளர பகிர்ந்தளிக்கும்
சமநிலை இறை(ரை)யோ!
பள்ளி கல்லூரிகளுக்கு
இடைக்கால விடுமுறை அளிக்கவந்த
சட்ட வல்லுனரோ!
காலம் மறந்துவிட்ட
கடமைமுறைகளை பருவம்தவறாமல்
பெய்து நினைவூட்டவந்த
உத்தம புருஷரோ!
நீலக்கடலுறுஞ்சி
கருமை நிறம் மாறி
பச்சைநிலம் செழிக்க
வெள்ளை நீர்கொடுக்கும்
வண்ண மாயனோ
மழையோ
நீயோ.

Friday, January 25th, 2008

சிதறல்கள்..!

சிதறல்கள்
மல‌ர்ந்திடும் வாசப் பூவிலும்
புலர்ந்திடும் வைகறை பொழுதிலும்
வீசிடும் தென்றல் காற்றிலும்
பேசிடும் பிஞ்சுக் குழந்தையிலும் 
தூவிடும் முத்துச் சாரலிலும்
கூவிடும் குயிலின் குரலிலும்
குளிர்ந்திடும் பௌர்ணமி நிலவிலும்
ஒளிர்ந்திடும் மாலை சூரியனிலும்
படர்ந்திடும் காலை பனியிலும்
நடந்திடும் பசுமை புல்வெளியிலும்
ஆடிடும் வண்ண மயிலிலும்
ஓடிடும் பஞ்சு மேகத்திலும்
உனக்கான என் காதலின்
எண்ணச் சிதறல்களை
ஒவ்வொரு துளியாய்
ஒவ்வொன்றிலும் சிதறவிட்டிருக்கிறேன்…