Archive for October, 2006

Monday, October 30th, 2006

“உயிர் உண்டியல்”

அமைதிக்காக
ஆலயத்தினுள்
அறிவு ஜீவிகள்…..
வயிற்றுக்காக
வாசலில்
வறுமைக்கோடுகள்….
- பிச்சைக்காரர்கள்

Friday, October 27th, 2006

மலர்களுக்கு ஒரு மடல் - தேவமைந்தன்

நட்புக்குரியீர்!
நீங்கள் -
எதன் வெளிப்பாடுகள்?
எதன் நோக்கங்கள்?
ஏதோ தோன்றி
ஏனோ மறையும்
இருத்தல்களும் போதல்களுமா
உங்கள் வாழ்க்கை?
பொருளற்றது என்று
புடவியிலெதுவும் எங்கும்
இல்லவே இல்லை.
பொருளற்றது! அது அப்படித்தான்!! 
என்று சொல்லி விடுதல்
மிகவும் எளிது. ஆனால்
உங்களின் இருத்தல் எவரையும்
உறுத்தாதது.
எங்களின் இருத்தலில் நீங்கள்
உடன் உறைபவர்கள்.
ஆகவே நீங்கள் வாழ்க,
ஒருபகல், ஓரிரவுப்
பொழுதேனும்……
(1993.போன்சாய் மனிதர்கள். தேவமைந்தன்)

Friday, October 27th, 2006

புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்

தரையினில் பரந்த
பசுமை வானம்.
பசுமை வானில்
புதியவிண் மீன்கள்,
பலநிறம் பூக்கும்
புல்வெளி மலர்கள்.
நீங்கள்
நடக்கும் பொழுது
மிதிக்கும் பூக்கள்.
நடக்கும் பொழுது
மிதிக்காமல், சற்று
ஒதுங்கி நின்றே
உற்றுப் பாருங்கள்.
புன்னகை பூக்கும்
புல்வெளி மலர்கள்……
(1980.புல்வெளி.தேவமைந்தன்)

Thursday, October 26th, 2006

எங்கேயப்பா வள்ளல்கள்? - தேவமைந்தன்

அன்றெல்லாம் வழங்கினராம்
அளவில்லாத கொடைகள்பல.
எதைக்கேட்ட போதினிலும்
அதைஅதை அந்தஅந்த முறைப்படி
வாரிவாரி வழங்கிடவே
வள்ளல்கள் வாழ்ந்தனராம்.
வாய்திறந்து கேட்காத
தேருக்கும் மயிலுக்கும்
நுண்ணுணர்வால் ஆராய்ந்து
கொடைகள்தாம் அளித்தனராம்.
இன்றைக்கு-
நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும்
நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும்
அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும்
நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும்
உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும்
‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன்
மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும்
கைசிவக்க வழங்குதற்கு
வள்ளல் இல்லையே.
ஈகைகளைச் செய்வதற்கு
மனமும் தொல்லையே… 
 

Thursday, October 26th, 2006

அழைக்காவிட்டால் என்ன? - தேவமைந்தன்

அழைப்பு வந்தது;
இருந்தேன்.
அழைப்பு வரவில்லை;
போனேன்.
தமிழ்வினைக்கு
அழைப்பு முக்கியம்
அல்ல என்பதால்…
 

Thursday, October 26th, 2006

மறதிப் பெருவெளி - தேவமைந்தன்

நினைந்து நடந்து முடிந்த நினைவுகள்
வனைந்து மிடைந்து விளைந்த முடிவுகள்
முகவரி இல்லா மொட்டை மடல்கள்
மயங்கிப் பிறரை மிதிக்கும் செயல்கள்
அகந்தை மிகுந்தே பிடிக்கும் அடவுகள்
பிறரைப் பொறாமல் கிளப்பும் பொய்கள்
வஞ்சக வாழ்த்தொடு
போலிமைப் புனைவுகள்
அனைத்தும் சிதைந்தே அடையாளம் இன்றி
மறைந்துட் கலந்தே  காணாது  போகும்
காலம் கடந்த பெருவெளி
ஞாலம் மறந்த மறதி வெளியே…

Wednesday, October 25th, 2006

எலிப்பொறி -தேவமைந்தன்

வடைக்காசைப் பட்டு
மாட்டிக் கொண்டாயிற்று.
உள்ளே ஓடிஓடி
கதவொடு மோதி
கம்பியை ஆட்டி
ஓய்ந்துபோய்ச் சுருண்டு
போனதும் தப்பில்லை.  எப்படியும்
கோணி சுருக்கித்தான் கதவைத்
திறக்கப் போகிறார்கள்.
அதில்தான்
இன்னும்
ஆபத்துள்ளது.
அனுபவசாலிகள்,
ஓட்டைக் கோணியைத்
தவிர்த்து விடுவார்கள்.
கட்டையோடு சுற்றிலும்
நெஞ்சக் குறுகுறுப்போடு
முரட்டுப் பயல்களும் நிற்கக்கூடும்.
ஆகவே,
மிச்சமிருக்கும் சுவையுள்ள வடையையும் தின்று முடி. ஒருகை பார்ப்போம்.
அடுத்தவர் எல்லைக்குள்
எதை நாடியும் மறந்தும் புகாதிருக்கத்
திட்டமிடு மனமே - ஒருவேளை நாம் வெற்றிபெற்று விடுவோம் என்றால்.
devamaindhan@pudhucherry.com
 

Tuesday, October 24th, 2006

வென்றவர் யார்? தோற்றவர் யார்? - தேவமைந்தன்

 
கண்ணே! 
என்னூர் மலையின் பக்கம் 
ஒருநாள் நான் கண்ட காட்சி இது. 
 
ஒதுக்குப் புறமானதோர் 
ஒற்றைப்பெரும் பாறை. 
போயும் போயும் அதன்மேல் 
சின்னஞ் சிறிய சிட்டுக் குருவியொன்று 
மோதி மோதிப் பார்த்துச் சலித்தது. 
 
எப்படிச் சொல்வது? எவ்வாறு தெரிவிப்பது? 
கற்பாறைமேல் மோதாதே என்று.. 
சலித்துப் போனேன்.. 
புரிந்துகொண்டு பறந்துபோய் விடுமென 
நம்பி இறங்கி வீடு திரும்பினேன். 
 
நெஞ்சுக்குள், மூளைக்குள் குடைச்சல். 
அறியும் ஆர்வம். 
ஓரிரு நாட்கள் கடந்தன வறிதே. 
 
மீண்டும் மலையேறினேன். 
ஒற்றைப்பெரும் பாறை 
ஓரம் திரும்பினேன். 
திடுக்கிட்டேன். 
நைந்துபோய் சின்னஞ்சிறிய அதனுடல் 
ஈரமூறிய இறகுப் பந்தாய் 
வன்பாறைதன் காலடியில். 
*******
devamaindhan@pudhucherry.com

Monday, October 23rd, 2006

“இன்னொரு சூரியன்”

தன்னம்பிக்கையாளனுக்கு
மின்மினிப் பூச்சிகூட
இன்னொரு சூரியன்தான்…
            - நவின்

Sunday, October 22nd, 2006

என்னவள் தந்த ஆத்திச்சூடி

அனிச்ச மலராம் அவளது கண்ணம்
ஆழ்ந்து பார்த்திட மாறுது எண்ணம்!
இறையெனும் சிற்பியின் இனையிலா படைப்போ
ஈடிலா அழகுடை பெளர்ணமி நிலவோ!
உள்ளம் இனித்திடும் உன்முகம் கண்டால்
ஊறிய மதுவாய் மயக்கமும் தன்னால்!
எண்ணி வியப்பேன் என்னவள் அழகை
ஏளனம் செய்வேன் தாமரை மலரை!
ஐயம் ஒன்று மனதினில் உண்டு
ஒப்பிட ஒரு பொருள் உண்டோ என்று!
ஓலை புரட்டா துவமை தரவே
ஒளவை அவளும் அவனியில் இல்லை!
                     — ராம்.கோபிநாத், U.A.E
                       r.gobinath@hotmail.com